search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
    X
    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்

    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்

    திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
    இறைவர் திருப்பெயர் : கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
    இறைவியார் திருப்பெயர் : கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி.
    தல விநாயகர் : கற்பக விநாயகர்.
    தல மரம் : முல்லை.
    தீர்த்தம் : க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் முதலியன.
    வழிபட்டோர் : பிரமன், கௌதமர், சந்திரன் ஆகியோர்.

    தல வரலாறு :

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.

    திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

    தல சிறப்புகள் :

    * ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.

    * இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன் லிங்கமும் உள்ளது.

    * மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.

    * சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.

    * இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.

    * இத்தலத்தில் உள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.

    * கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

    * இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.

    * கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.

    * கருவுடன் மரணமடைவோரும் இல்லை.

    * கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

    * இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    * இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.

    * முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.

    அமைவிடம் :

    கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

    கோவில் முகவரி :

    அருள்மிகு கர்பரக்ஷாம்பிகை முல்லை வனநாதர் கோவில்
    திருகருகாவூர் -614 302
    பாபநாசம் தாலுகா
    தஞ்சாவூர் மாவட்டம்
    தொலைபேசி  04374 - 273423
    கைபேசி -04374 - 273423
    மின் அஞ்சல் - eomullaivananathartkr@gmail.com
    Next Story
    ×