சென்னை கோபாலபுரம் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோவில்
- பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.
- விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.
1917ஆம் வருடம், வேதாரண்யம் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் சிவாலயத்துக்கு அருகில் பூமியைத் தோண்டும்போது,
பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.
அரசாங்க அனுமதியுடன் அதைச் சென்னைக்கு எடுத்து வந்து, இப்போது கோவில் உள்ள கோபாலபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்று துவங்கி, இன்றளவும் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் வள்ளலென அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வேணுகோபால சாமி.
அழகிய பசு நின்றிருக்க, நான்கு திருக்கரங்களில் புல்லாங்குழல் மற்றும் சங்கு, சக்கரங்களுடன்,
அழகுறக் காட்சி தரும ஸ்ரீ வேணுகோபாலரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
இந்த ஆலயத்தில் திருமாலின் பத்து அவதாரங்களையும் சித்தரிக்கும் வகையிலான வெள்ளிக்கவசம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு, முழுவதும் தங்கத்தால் ஆன மண்டபம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை ஒட்டி, ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் அருகில் ஸ்ரீவராகமூர்த்தியும் காட்சி தருகின்றனர்.
வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறும் ஆலயம் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரமான,
கோகுலாஷ்டமி நாள் இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
கோவிலில் உள்ள அரச மரம் சிறப்புக்குரிய ஒன்று.
இந்த மரத்தில் ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகிய மூவரும் உறைந்திருப்பதாக நம்பிக்கை.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று (அமாவாசை சோமாவாரம் என்பார்கள்) இந்த மரத்தை வழிபட்டு வர,
விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.