ஆன்மிக களஞ்சியம்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர்

Published On 2023-12-21 13:18 GMT   |   Update On 2023-12-21 13:18 GMT
  • மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வடகரையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர்.
  • திருஇந்தளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது.

மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வடகரையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர்.

இதன் புராணப் பெயர் திருஇந்தளூர்.

இங்கு பரிமளரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

கன்னித் தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த் திருநாட்டில் கங்கையிற் புனிதமாகிய காவிரி கரையிலமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன.

அவைகள் முறையே திருவரங்கப்பட்டினம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கோயிலடி, திருக்காட்டுப் பள்ளி அருகில் உள்ளது) கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என்பன.

திருஇந்தளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது.

ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் இவ்வூருக்கு திருவிந்தளூர் (திருஇந்தளூர்) என்று பெயர்.

இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக்காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் என்ற பெயரும் உண்டு.

இந்து என்ற சொல் இந்திரனைக் குறிக்கும்.

தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய ஷயரோகம் தோன்றவே, அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றான்.

அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருக்குளத்தை இந்து புஷ்பகரணி என்றும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டியுள்ளதால் இப்பெயர்கள் அமைந்துள்ளன.

பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப் போக, பிரம்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்டியுள்ளதால் பெருமாள் அவ்வேதங்களை அரக்கர்களிடமிருந்து மீட்டு   வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்தமையால் இறைவன் பரிமள ரங்கநாதன் என்று அழைக்க பெறுகிறார்.

மூலத்தான விமானம் வேதாமோத விமானம், அம்பரீஷ மகாராஜன் என்ற மன்னன் இப் பெருமானுக்கு கோவில்

கட்டினார் என்றும், வைகாசி மாதத்தில் தேர்திருவிழா பிரம்மோத்சவம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

சந்திரன் பங்குனி மாதம் எம் பெருமானுக்கு பிரம்மேத்சவம் செய்தபடியால் இன்றும் பங்குனியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது.

துலாம் (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிகப் புண்ணியம் வாய்ந்தது என வரலாறு கூறுகிறது.

இதன் காரணமாகவே துலாம் பிரமோத்சவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News