ஹார்லியின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் இந்திய முன்பதிவு துவக்கம்!
- ஹார்லி டேவிட்சன் X440 மாடல் வினியோகம் அக்டோபர் 2023-ம் ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது.
- புதிய X440 மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹார்லி டேவிட்சன் இந்தியா தனது X440 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமாக துவங்கியது. புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்பதிவு ஹார்லி டேவிட்சன் விற்பனை மையங்கள், ஆன்லைன் வலைதளம், தேர்வு செய்யப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான வினியோகம் அக்டோபர் 2023-ம் ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது.
புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் உற்பத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீம்ரானா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் X440 மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஆயில், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் 2 வால்வு செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.