எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது- அல்லு அர்ஜூனுக்கு ராஷ்மிகா, நானி ஆதரவு
- புஷ்பா-2 முதல் காட்சியின்போது ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்று என ராஷ்மிகா கூறினார்.
- இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நானி கூறினார்.
ஐதராபாத்:
நடிகர் அல்லு அர்ஜுன், கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். அவருடம் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அல்லு அர்ஜுனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நம்பள்ளி கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜூனுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நானி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராஷ்மிகா கூறியதாவது:-
இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடிவில்லை. புஷ்பா-2 முதல் காட்சியின்போது ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்று. வருத்தமான ஒன்றும் கூட. ஆனாலும் எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது என கூறினார்.
இது குறித்து நானி கூறியதாவது:-
சினிமா பிரபலங்கள் தொடர்புடைய விஷயங்களின் மீது அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்களின் மீதும் காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன். அது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.
அதிலிருந்து நாம் பாடத்தை கற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். ஒரு மனிதர் மட்டும் இதற்கெல்லாம் பொறுப்பாக முடியாது என கூறினார்.