விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்கள் படத்தை பார்த்து தீர்மானிக்க வேண்டும் - இயக்குனர் மோகன் ராஜா கோரிக்கை
- எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
- இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதனை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டார். அதன்பின் அவர் பேசியதாவது, ''என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. 'வேலைக்காரன்' படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குனராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் 'லாக்கப்' எனும் படத்தை இயக்கினார். 'லாக்கப்' ஒரு உணர்வுபூர்வமான படைப்பு.
சார்லஸின் கதையை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'சொப்பன சுந்தரி' என்றதும் அனைவருக்கும் 'கரகாட்டக்காரன்' பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த 'சொப்பன சுந்தரி'யை பட வெளியிட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக் கொள்வார்கள்.
அண்மை காலமாக 'தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு' என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தருவதால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடைபெறுகிறது. விமர்சனம் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்புகள் என்ற ஒரு சினிமா இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டை நிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். இதற்கு அனைவரும், அனைத்து திரைப்படங்களையும், திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்தால்தான் உருவாகும். தெரிந்து செல்வது சினிமா அல்ல. தெரியாமல் சென்று இருட்டறைக்குள் நீங்கள் ரசித்து முடிவு செய்வது தான் சினிமா. எனவே அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.