null
பும்ராவை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்த குல்தீப்
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழலில் சிக்கி 218 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் தொடக்க சிறப்பாக அமைந்தது. கிராலி - டக்கெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார்.
ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி, முதல் விக்கெட் எடுத்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். முக்கியமாக குல்தீப் ஓவரை விளையாட முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அக்ஷர் படேல் 2205 பந்துகளில் 50 விக்கெட்டுகளையும் பும்ரா 2530 பந்துகளில் 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். வெறும் 1871 பந்துகள் வீசி இந்த சாதனையை குல்தீப் படைத்துள்ளார்.