குல்தீப் யாதவ்- அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து- 218 ரன்னில் ஆல் அவுட்
- இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்து அணியின் கிராலி அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்த்தார்.
தர்மசாலா:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது.
இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. 4 போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தொடங்கியது.
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றார். தேவ்தத் படிக்கல் டெஸ்டில் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 5-வது இந்திய வீரர் ஆவார். ஏற்கனவே ரஜத் படிதார் துருவ் ஜூரல், சர்பிராஸ்கான், ஆகாஸ் தீப் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். காயம் அடைந்த ரஜத் படிதார் இடத்தில் படிக்கல் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு மார்க்வுட் இடம் பெற்றார்.
இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோக்கும் இன்று 100-வது டெஸ்டில் விளையாடினார்கள். 100-வது டெஸ்டில் இதுவரை 76 வீரர்கள் விளையாடி உள்ளனர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கிராவ்லி யும், பென் டக்கெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 14.2 ஓவர்களில் 50 ரன்னை தொட்டது.
இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென்டக்கெட் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அப்போது ஸ்கோர் 64 ஆக இருந்தது. அடுத்து ஆலி போப் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரியில் 50 ரன்னை தொட்டார். அவரது 14-வது அரை சதமாகும்.
2-வது விக்கெட் ஜோடியையும் குல்தீப் யாதவே பிரித்தார். போப் 11 ரன்னில் அவுட் ஆனார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. கிராவ்லி 61 ரன்னில் களத்தில் இருந்தார்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய குல்தீப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிராலி 79 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 29 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 0 ரன்னிலும் குல்தீப் ஓவரில் வெளியேறினார்.
இதனையடுத்து அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அஸ்வினும் அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 57.4 ஓவரில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.