டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் ஜேம்ஸ் ஆண்டர்சன்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
- 42 வயதாகும் ஆண்டர்சன் 197 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்விங் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் உண்டு என்றால் அது மிகையாகாது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது 700 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் வார்னே சாதனையை சமன் செய்வார்.
அடுத்த மாதத்துடன் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 42 வயது முடிவடைகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம் தன்னுடைய பந்து வீச்சு மூலம் தற்போது இல்லை என பதில் அளித்து வந்தார்.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, டெஸ்ட் அணியின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான பிரெண்டம் மெக்கல்லம் நியூசிலாந்தில இருந்து 11 ஆயிரம் மைல்கள் கடந்து இங்கிலாந்து வந்து ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இந்த வருடம் இறுதியோடு, அதாவது இங்கிலாந்தின் கோடைக்கால (Summer) கிரிக்கெட் சீசனுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசி 12 மாதங்களில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரின்போது புது வேகபந்து வீச்சாளருடன் களம் இறங்க மெக்கல்லம் விரும்புவதாக தெரிகிறது.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மிகப்பெரிய வகையில் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைக்கப்படுவாரா? அல்லது இங்கிலாந்து அணிக்காக கடைசி போட்டியில் விளையாடி விட்டாரா? என்பது தெரியவில்லை.
இங்கிலாந்து அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும், இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட்-செப்டம்பரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
2003-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.