கோவில்கள்

கரையேற்றும்பிரான் என்னும் பாடலீஸ்வரர்...

Published On 2023-06-02 07:49 GMT   |   Update On 2023-06-02 07:49 GMT
  • 12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது.
  • இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசன், உத்திரசேனன், பாடலநாதர், கரையேற்றும்பிரான் போன்ற பல்வேறு பெயர்களாலும், அம்பாளை பெரியநாயகி, லோகாம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் செப்பு தகடுகளால் வேயப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழமை வாய்ந்த மரமாக உள்ளது. இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கெடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும், அதையடுத்து 7 நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலை கடந்து உள்ளே சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம் மற்றும் நந்தியும் உள்ளது. இங்கிருந்தே இறைவனை தரிசிக்கலாம்.

வெளிபிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, 2-வது வாசலை கடந்து இடது புறமாக திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தியும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இந்த கோவிலில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும் போது 63 நாயன்மார்கள் சன்னதியை பார்த்து தரிசிக்கலாம்.

தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்பாலிக்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவ திருமேனிகளின் சன்னதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலீஸ்வரரை தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருநாவுக்கரசர் வழிபட்ட பாடலீஸ்வரர் கோவில்

சைவ பெரியவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் பண்ருட்டி அருகே திருவாமூரில் பிறந்தவர். சமண சமயத்தை சேர்ந்த அவர் சைவ சமயத்துக்கு மாறியதால், அவரை கொல்ல சமணர்களும், சமண சமயத்தைச்சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவனும் திட்டமிட்டனர். சமணர்கள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, மகேந்திர வர்ம பல்லவன் பிடித்து துன்புறுத்தினார். இதற்கெல்லாம் சற்றும் கலங்காத அப்பர் பெருமான் சிவபெருமானை வணங்கி, அந்த துன்பங்களில் இருந்து மீண்டார். இருப்பினும் பல்வேறு துன்பங்களில் இருந்து மீண்ட, அவரை கொல்லாமல் விடக்கூடாது என்று முடிவு செய்த, சமண சமயத்தவர், அவரை ஒரு கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தனர். ஆனால் அவரோ இறைவனை நினைத்து நெஞ்சுருகி, சொற்றுணை வேதியன் சோதிவானவன் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். அப்போது அந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. பின்னர் அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார் என்று வரலாறு கூறுகிறது.

பாதிரி மரம்

இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படி பாடிய அடியார்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் திருக்கோவில். பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற் காக பறிக்க விரும்பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களை பெற்றார். இதனால் இவர் 'புலிக்கால் முனிவர்' என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே 'பெரும்பற்ற புலியூர்' என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் 'திருப்பாதிரிப்புலியூர்' என்றானது.

நினைத்த காரியம் நிறைவேற பாடலீஸ்வரரை வழிபடுங்கள்

பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தேரின் சிறப்பு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம் முடிவடைந்து, முதன் முதலில் கடந்த 22.5.2005-ம் ஆண்டு வைகாசி மாத பெருவிழாவையொட்டி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இந்த தேர் 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டது. இந்த தேரின் அமைப்புகள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

தேர் சக்கரத்தின் மேல் தாமரை வடிவத்தில் பூலோகம் பஞ்சபூதமாக காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சூரியன், சந்திரன் 2 தேர் சக்கரங்களாக உள்ளது. மண்ணுலகம் பரந்த காட்சியை விளக்குகிறது. ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில், அதில் உள்ள இலுப்பை, காட்டு வாகை, தேக்கு, வேங்கை மரங்கள் உணர்த்துகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் தேரில் ஒரு நாள் வலம் வரும் காட்சியை குறிக்கிறது. இறைவன் இருப்பிடம் ஆகாய லோகமாகவும், கும்ப கலசங்கள் ஈர்ப்பு சக்தியாக உள்ளது. கும்ப கலசம் தாமிரத்தால் உருவாக்கப்பட்டது. தாமிரம் இழுக்கும் சக்தி, கடத்தும் சக்தியை குறிக்கிறது.

தேரின் மொத்த எடை 45 டன் ஆகும். 4 சக்கரங்கள் 5 டன் எடை கொண்டது. இரண்டு அச்சுகள் 2½ டன் எடை, நீளம், அகலம் தலா 25 அடி, வடம் 200 அடி வரை உள்ளது. தேரின் 57 கால்கள் 57 தத்துவங்களை குறிக்கிறது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இறைவனே நேரில் வந்து காட்சி அளிக்கும் வகையில் இந்த தேர்த்திருவிழா நடக்கிறது.

பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

சித்திரை- இளவேனில் வசந்த விழா (அப்பருக்கு 10 நாட்கள் விழா)

வைகாசி - வைகாசி பெருவிழா

ஆனி - மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் விழா

ஆடி - அம்பிக்கைக்கு ஆடிப்பூர விழா (10 நாட்கள்)

புரட்டாசி - நவராத்திரி விழா

ஐப்பசி - அன்னாபிஷேகம்

கார்த்திகை - சோமவார விழாக்கள்

மார்கழி - திருவாதிரை மற்றும் தனுர்மாத விழா

தை - பெண்ணையாற்றில் தீர்த்தவாரி மற்றும் தை அமா வாசை கடல் தீர்த்தவாரி

மாசி - மாசி மக தீர்த்தவாரி

உபமன்னியர் முயல் வடிவம் நீங்கப்பெற்ற தலம்

பாதிரியை தல விருட்சமாகவும், புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு உபமன்னியர் முனிவர் வழிபட்டு, தன்னுடைய முயல் வடிவத்தில் இருந்து சாப விமோசனம் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. இது தவிர அக்தியர், மங்கணமுனிவர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலமாகவும் உள்ளது.

வைகாசி பெருவிழாவும், எல்லை கட்டுதல் நிகழ்ச்சியும்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதில் பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் குறிப்பிட்ட தூரம் வரை 4 திசைகளிலும் ஓடிச்சென்று எல்லை கட்டுவர்.

அதாவது, பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவைகளுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது.

பாடலீஸ்வரருக்கு அபிஷேகம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. குறிப்பாக சாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.

அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோசாலையின் பாலில் இறைவனுக்கு அபிஷேகம்

பாடலீஸ்வரர் கோவிலில் கோசாலை உள்ளது.இந்த கோசாலையில் பசு, கன்றுகள் என 85 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளில் இருந்து கறக்கும் பாலை பாடலீஸ்வரருக்கு 5 கால பூஜைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவற்றை கன்று குட்டிகள் குடிப்பதற்காக விட்டு விடுகிறார்கள். இதனால் இந்த பால் கோவிலை தாண்டி எங்கும் கொடுப்பதில்லை.

இந்த கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பக்தர்கள் பசுந்தீவனம், வைக்கோல் வழங்கி பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்தி கீரைகளை பக்தர்கள் வழங்கி வருகின்றனர். விரும்பும் பக்தர்கள் கோவில் திறந்திருக்கும் நேரம் பசுகளுக்கான தேவையான தீவனங்களை வழங்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோஷம் நீக்கும் பாதிரி மரம்

கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.

இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

Tags:    

Similar News