மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வரலாறு
- 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது.
மணப்பாறை நகரம் வணிக நிலையங்களுக்கும், முறுக்கிற்கும், மாடுகளுக்கும் மிகவும் பெயர் பெற்றதோடு மட்டுமின்றி, புனிதமிகு தெய்வத் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பெயர்பெற்றது என்றால் அது மிகையாகாது. மணப்பாறையின் மையப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கொண்டு தம்மை உளத்தூய்மையோடு வணங்குபவரின் பெருந்துயர் களைந்து, கொடிய நோயகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருபவளே மணவை மாரி.
புனிதக்கல்
அடிப்படை வசதிகளேயற்ற பழமையான அக்காலத்தில் மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்பமரமொன்றை சுற்றி மூங்கில் மரங்கள் வான்நோக்கி வனப்போடு புதராய் வளர்ந்தோங்கி நின்றிருந்தன. அதில் மூங்கில் மரமொன்றை ஒருவர் வெட்டிச்சாய்க்க முனைந்தபோது வெட்டரிவாளின் கூரியமுனை வேப்பமரத்தின் அடியைத் தீண்ட, அதில் இயற்கையிலேயே தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
எதிர்பாராத இக்காட்சியால் அரிவாளால் வெட்டியவர் அதிர்ந்து போய் அலறியடித்து ஊரைக்கூட்ட, ஊரார் ஒருங்கே திரண்டு அக்காட்சியை பயபக்தியாய் இறைப்பெருக்கோடு கண்டுகளித்தனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து தான் மகமாயி என்றும், இவ்வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாக குடிகொண்டு இருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால் இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினார். அதனை ஊரார் ஏற்று மாரிக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்தனர்.
வேண்டிச்செல்லும் காரியங்கள்
அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது. சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட மாரியம்மனுக்கு காட்டும் புனித தீபாராதனைகள் முதலில் அப்புனித கல்லிற்கு காட்டப்பெறுதலை இன்றும் காணலாம். இவ்வேப்பிலை மாரியினை கண்ணபுரத்தாளாம் சமயபுர மாரியின் அருமை சகோதரி என இறைநெஞ்சங்கள் கூறி மகிழும் தனித்தன்மை வாய்ந்ததாம். மேலும் இம்மாரியை கைகொடுக்கும் மாரி என்றும், கைவிடாத மாரி என்றும், கண்கண்ட மாரி என்றும் அம்மை முத்துக்களை அகற்றிக்காக்கும் முத்துமாரி என்றும், கண் அளிக்கும் மாரி என்றும் போற்றிப் பாராட்டுதலை யாவரும் அறியலாம்.
இத்தெய்வத் திருமகளை வணங்கி வேண்டிச் செல்லும் காரியங்கள் யாவும் எளிதில் கைகூடுதலை இந்த ஆலயத்திற்கு அலைகடலெனப் பெருகும் இறையன்பர்களின் எண்ணிக்கையை கொண்டே எளிதில் உணரலாம். பெருந்திரளான பெண்களின் கூட்டம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பெருகி வருதலை பலரும் அறிவர்.
கும்பாபிஷேக விழா
இக்கோவில் 1979-ம் ஆண்டில் கொடிய தீ விபத்திற்குள்ளானது.
இதையடுத்து மணவை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி டாக்டர் வி.என்.லெட்சுமிநாராயணனின் சீரிய தலைமையின் கீழ் ஒரு திருப்பணி குழுவை அமைத்து, நன்கொடை திரட்டி புதுமை பொலிவோடு அழகுகொஞ்சும் கோவில் கட்டி கடந்த 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மேலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கிணங்க இத்திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாததைப் பெருங்குறையாக கருதிய இம் மாநகரத்து ஆன்மிக சான்றோர்கள் திருப்பணி குழுவினர், தமிழக அரசின் மேன்மையான ஒத்துழைப்போடும் பொருளுதவியோடும் மிகச்சிறப்புற அழகுமிகு 3 நிலை ராஜகோபுரத்தை அற்புதமாக கட்டி கடந்த 14.3.1994 அன்று கும்பாபிஷேக விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.