கோவில்கள்

மாறநேரி சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில்

Published On 2023-06-26 05:30 GMT   |   Update On 2023-06-26 05:30 GMT
  • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமை கொண்டது.
  • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மாறநேரி கிராமம். 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த ஊரில் 1,200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அமைந்து உள்ளது.

நிருபகேசரி ஈஸ்வரம் என்று முற்காலத்திலும், பசுபதீஸ்வரர் கோவில் என்று தற்காலத்திலும் இந்த சிவாலயம் அழைக்கப்பெறுகிறது. இந்த சிவாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வரலாற்றில் நீங்கா இடம்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேரிவாயில் என்று அழைக்கப்பெற்ற இந்த ஊர் பல்லவர் ஆட்சி காலமான கி.பி. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மாறநேரி என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து நோக்கும்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் தொட்டு இந்த ஊர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்துள்ளது.

சேரன் செங்குட்டுவன், சங்கால சோழ அரசர்கள், பல்லவ அரசர்களான நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், முத்தரைய மன்னன் சுவன்மாறன், ராஜராஜ சோழன், முதற்குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களுடனும், அவர்தம் மரபு மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர் என்பதும், பல வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தேறின என்பதும் அறிய முடிகிறது.

பல பெயர்கள்

நேரிவாயில் என்றும், மாறநேரி என்றும், நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல பெயர்கள் இவ்வூருக்கு பல்வேறு காலகட்டத்தில் திகழ்ந்தன என்றாலும், மாறநேரி என்ற பெயரே நிலைத்த பெயராக விளங்குகிறது.

நந்திவர்மபல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கபல்லவன் தன் பெயரால் நிருபகேசரி ஈஸ்வரம் என எடுத்ததே இவ்வூர் சிவாலயமாகும். இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

தற்போது இந்த கோவில் சிவகாமசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கற்கோவிலாக விளங்கியுள்ளது. பல்லவ மன்னருக்கு பின்பு வந்த பல அரச மரபினர் காலங்களிலும் இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளது.

சிதிலமடைந்த கோவில்

காவிரி மற்றும் வெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல முறை இந்த ஊரும், கோவிலும் பாதிப்புக்கு உள்ளாயின என்பது கல்வெட்டு சாசனங்கள் மூலம் அறியப்படும் செய்தியாகும். மேலும் வடபுலத்து கொள்ளையர்களின் படை எடுப்பு காலங்களிலும் இந்த கோவிலுக்கு பல ஊறுகள் நிகழ்வுற்றன. பல்வேறு பேரழிவுகளை சந்தித்தபோதும் பழமையின் எச்சங்கள் பலவற்றை சுமந்த வண்ணம் இந்த கோவில் விளங்குகிறது.

மூலவர் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகள் மட்டுமே கருங்கற் கட்டுமானமாகவும் மற்ற அனைத்து பகுதிகளும் செங்கற கட்டுமானமாகவும் இருந்தன. பரிவார தெய்வங்களாக கணபதி பெருமானும், முருகப்பெருமானும் தனித்தனி சிற்றாலயங்கள் பிரகாரத்தில் அமைந்திருந்தன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

திருப்பணி

மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம், திருப்பணி குழுவினர், மாறநேரி கிராமத்தார்கள் மற்றும் சிவபக்தர்கள் விரும்பினர். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் இருந்தபோது 13-வது நிதி ஆணையத்தின் மூலம் பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுடன் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த உபயதாரர்கள் பலர் அளித்த நன்கொடையின் வாயிலாக சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு 30-ந் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில், மகாலட்சுமி, ரங்கநாதசுவாமி ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் காட்சி அளிக்கின்றன. பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனிசன்னதியுடன் காட்சி அளிக்கின்றன. மேலும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமிகளும் உள்ளன.

சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது.

கோவிலுக்கு செல்வது எப்படி?

சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து திருவெறும்பூர், மாறநேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மாறநேரிக்கும், தஞ்சையில் இருந்து பூதலூர் வழியாக மாறநேரிக்கும், கல்லணையில் (தோகூர்) இருந்து மாறநேரிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News