நம்பி வருவோரின் பிரச்சினையை தீர்க்கும் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலம்
- எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
- குமரி மாவட்டத்தில் உள்ளது சிறப்பு மிக்க இந்த திருத்தலம்.
குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க திருத்தலங்களில் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலம் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்கம்பாறை சந்திப்பில் இருந்து அஞ்சுகிராமம் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
நீர்வளமும், நிலவளமும், இயற்கை எழிலும் நிறைந்த சகாயபுரத்தின் மையமாக இடைவிடா சகாய அன்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
சகாயபுரம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாவும், விவசாய தினக்கூலிகளாகவும் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பலர் பாறையை பிளந்து கல் உடைத்து எடுப்பது, சிற்பங்கள் செதுக்க கீற்றுக்கல் எடுத்து கொடுப்பது, கல் தூண்கள் செதுக்கி கொடுப்பது, ஆட்டுக்கல், அம்மி கொத்தி கொடுப்பது, சிற்பங்களை செதுக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.
பிரச்சினைகளில் இருந்து விடுதலை
இங்குள்ள சகாய அன்னையின் திருஉருவ படம் உயிர்துடிப்பும், அருள் ஆற்றலும், கனிந்த பார்வையும், நெஞ்சத்தை ஈர்க்கும் தன்மையும் உடையது. இதை உற்று நோக்குவோர், உள்ளம் உருகி அன்னைக்கு அடிமையாகி ஆழ்ந்து போகிறார்கள். அவரது அருளை பல்வேறு வடிவங்களில் பெற்று செல்கிறார்கள்.
குறிப்பாக இறைவன்மீது பற்றுதல், இயேசுவை பின்பற்றும் ஆர்வம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, திருமணம், மகப்பேறு வரம், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை போன்றவற்றை பெறுகிறார்கள்.
மெய்மறந்து மன்றாடுகிறார்கள்
ஆலயத்தின் உள்அமைப்பும், ஆலய வளாகத்தில் காக்கப்படும் அமைதி சூழலும் பக்தர்கள் கடவுளையும் அன்னையையும் நெருக்கமாக சந்திக்கவும், ஆறுதல் அடையவும் தூண்டுகிறது. இதனால் பலர் தனிமையாகவும், குடும்பத்தோடும் எல்லா நாட்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஆலயத்தில் அமர்ந்து மெய்மறந்து மன்றாடி செல்கிறார்கள். இங்கு புதுமைகள் நடக்கின்றன என்றோ, பலர் அருங்காட்சிகள் காண்கிறார்கள் என்றோ பொறுப்பானவர்கள் பேசுவதோ, அறிவிப்பதோ இல்லை. சகாய அன்னை வழியாக இறைவனிடம் உருக்கமாக, நம்பிக்கையுடன் மன்றாடி வாழ்வின் பல்வேறு நலன்களை பெற்றவர்களே தங்களது அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.
இதனால் தொடக்க காலத்தில் இருந்தே பெருமளவில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நவநாட்களில் பங்கு பெற்றுள்ளனர்.
வாகனங்கள் அர்ச்சிப்பு
இங்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதையும், விண்ணப்பங்கள், நன்றியறிதல்கள் மிகுந்து வருவதையும் புதன்கிழமை நவநாளில் வருவோர் கண்டுகொள்கிறார்கள்.
புதிதாக வாங்கப்பெற்ற மற்றும் தகுதிச்சான்றிதழ் பெற்ற பலவகைப்பட்ட வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்துகூட அர்ச்சிக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. சகாய அன்னை ஊர்திகளுக்கும், அவற்றில் பயணம் செய்வோருக்கும், உழைப்போருக்கும் பாதுகாப்பு நல்குகிறார் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இதுவும் இந்த திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.
ஒப்புரவு ஆலயம்
இந்த திருத்தலத்திற்கு வரும் மக்கள் உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் பாரங்களை சுமந்து வந்து திருத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு அமைதியான மனதோடு திரும்ப செல்கிறார்கள். இதற்கு உதவும் வகையில் அண்மையில் ஒப்புரவு ஆலயம் ஒன்று ஆலயத்தின் வெளியே முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க இருதனி அறைகள் உள்ளன.
இங்கு நிதானமாக அமர்ந்து தகுந்த தயாரிப்புடனும் மனத்துயருடனும் வழக்கமான தனிப்பாவ மன்னிப்பு பெறவும், உரையாடல் வழி ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை உளவியல் அறிஞருடன் அமர்ந்து கலந்துரையாடி வழிகாட்டுதல், மனத்திடன் பெறும் ஆற்றுப்படுத்தலுக்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அருட்பணியாளர்கள், உளவியல் அறிஞர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருத்தலத்துக்கு வருவோர் மனிதரை மனிதர் அன்பு செய்ய தூண்டும், மனித நேயப்பண்புகளை வளர்த்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த திருத்தலம் கோட்டார் மறைமாவட்டத்தின் அங்கமாக இருப்பதுடன், ஒரு தனி பங்காகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பங்குதந்தையாக அருட்பணியாளர் ஜோசப்ரொமால்ட் செயல்பட்டு வருகிறார்.