கோவில்கள்

வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

Published On 2023-05-26 06:32 GMT   |   Update On 2023-05-26 06:32 GMT
  • முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார்.
  • சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.

இந்து கடவுளர்களில் இளம் வயது கடவுள், முருகப்பெருமான் மட்டுமே. 'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான 'கவுமாரம்' என்பதன் தெய்வமும் முருகனே ஆவார். மேலும் இவர் தமிழ்க் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.

சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப்பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்புஆறு குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று சமய நூல்கள் கூறுகின்றன. இவருக்கு கந்தன், கடம்பன், வேலாயுதன், சரவணபவன், குமரன், வேலவன், தண்டாயுதபாணி போன்ற பல பெயர்கள் உள்ளன.

ஒருநாள் நாரதர், கயிலாயம் சென்று சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்தார். அந்த பழம் தனக்கு வேண்டும் என முருகனும், விநாயகரும் முரண்டுபிடித்தனர். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் 'தாய் தந்தையரே உலகம்' என்று கருதி அவர்களை மும்முறை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

உலகை சுற்றிவந்த முருகன் இந்தச் செயலால் கோபம் கொண்டு, பழனி மலை மீது ஆண்டிக்கோலமாக அமர்ந்தார். அதனடிப்படையில் மலை தோறும் முருகன் கோவில்கள் உருவானது. தென்னிந்தியாவில் மலைகள் அதிகம் என்பதால் முருகன் கோவில்களும் அதிகமானது, அவரை வழிபடும் பக்தர்கள் கூட்டமும் உயர்ந்தது. முருக பக்தர்கள் அதிகரிக்க மலைகளைத்தாண்டி சமவெளிப் பகுதிகளிலும் முருகன் கோவில்கள் உருவானது. இப்படி உருவான முருகன் கோவில்களில் ஒன்றே வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்.

தலவரலாறு

புராண காலத்தில், ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. அதனுடைய அடையாளமாக ஆலயத்தைச் சுற்றி இன்றளவும் அதிக ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள வள்ளிமலைக்கு வந்துவிட, தேவர்களும் முனிவர்களும் பெருமானைத் தேடி பூலோகம் வந்து அலைந்து திரிந்தனர். பல இடங்களில் தேடியும் அவர்களால் முருகனை காணமுடியவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் துவண்டு வருத்தமுற்றனர். அப்போது அருவமாக தோன்றிய முருகன், "இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நான் உங்களுக்கு காட்சி தருவேன்" என்று கூறினார்.

அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் ஆகியோர் சூழ ஒரு அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவமாக காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் கண்டுகளித்தனர். ஆனால் அதில் நிறைவு கொள்ளாத அவர்கள் மீண்டும் அருட்காட்சி தரவேண்டும் என்று வேண்டினர். அதை ஏற்ற முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்ததார். அதனால் இத்தலம் 'வில்லுடையான்பட்டு' என பெயர் பெற்றது. பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு 'சரவண தீர்த்தம்' என்று பெயரிட்டார். இவ்வாறு முருகன் காட்சியளித்து தனது வேலையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் 'வேலுடையான்பட்டு' என்று அழைக்கப்பட்டது. அனைவருக்கும் காட்சியளித்த முருகப்பெருமான் அந்த இடத்தில் கல்லுருவமாய் மாறி பூமியில் நிலைத்தார்.

இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்தது. அதன்பின்னர் இப்பகுதியை ஆட்சிசெய்த சித்திரகாடவன் என்னும் பல்லவ வம்சத்து அரசன், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது. கி.பி. 13-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அம்மன்னனின் பசுக்கள், இந்தப் பகுதியில் மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களை பின் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். வியப்புற்ற மன்னன் அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பீறிட்டு எழவே திடுக்கிட்டு அந்த இடத்தில் இருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் சிலையாக முருகப்பெருமான் காட்சி தந்தார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உரு வானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோவில்.

மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலிலிருந்து கிடைத்தவர். ஆம்! இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆனால் எங்கு எப்போது கிடைத்தது என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் கோபுரமின்றி தெய்வானை திருமண சிற்பத்துடன் கூடிய தோரண வாசலுடன் அமைந்துள்ளது. அதை அடுத்து முகப்பு மண்டபத்தில் ஐந்து சூலாயுதங்களும், பலிபீடமும், கொடிமரமும், மயில் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திற்கு வெளிப்புறத்தில் இடது பக்கத்தில் விநாயகர், ஆதிலிங்கம், வலது பக்கத்தில் தண்டாயுதபாணி ஆகியோரின் சிறு சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் உட்புறம் இடது பாகத்தில் அருணகிரிநாதர், நால்வர் சன்னிதிகளும், அதற்கு நேர் எதிரில் தூணில் ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி நடராஜர் சபையும் அமைந்துள்ளது.

கருவறைச் சுற்றிலும் விநாயகர், விசாலாட்சி, விசுவநாதர், அகத்தியர்-லோபமுத்ரா, துர்க்கை ஆகிய சன்னிதிகளும், சனிபகவான், ஐயப்பன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அர்த்தமண்டபத்தைத் தாண்டி உள்ளே செல்ல கருவறையில் சுயம்புவான மூலவர் வள்ளி- தெய்வானை உடனாய சிவசுப்ரமணியசுவாமியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிரகாரச் சுற்றில் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சுந்தரேசுவர பெருமான் சன்னிதியும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்பாள் சன்னிதியும், மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதியும் அதனை ஒட்டி முருகப்பெருமானின் வாகனமான மயில்கள் வாழுமிடமும் இடம் பெற்றுள்ளது.

ஆலயத்தின் வாசலை ஒட்டி வலதுபுறம் நவக்கிரக சன்னிதியும், தலவிருட்சங்களும், தேர் வடிவ வசந்த மண்டபமும் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே முருகப்பெருமானை நோக்கியவாறு இடும்பன் உள்ளார். அவருக்குப்பின்னால் முருகன் தன் சூலாயுதத்தை நட்டு உருவாக்கிய சண்முக தீர்த்தம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. தீர்த்தத்தின் படித்துறையில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி செல்வ விநாயகர் அமர்ந்துள்ளார்.

அமைவிடம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடைபட்ட வடக்குத்து என்ற ஊரிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். வடலூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

-நெய்வாசல் நெடுஞ்செழியன்.

Tags:    

Similar News