ஆன்மிகம்
பாம்பாட்டி சித்தர்

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பாம்பாட்டி சித்தர்

Published On 2020-03-12 06:50 GMT   |   Update On 2020-03-12 06:50 GMT
பாம்பாட்டி சித்தர் குகையில் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று குரு பூஜை மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பை பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பதே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளை பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனை பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். அதனை கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப்பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார்.

அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப்பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். அவர் கூறிய எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியை பார்த்து விளக்கமளிக்க தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக்கொண்டு இருக்கும் அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது.

இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதார பாம்பின் உறக்கம் தான். இறைவனை உணர பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார். பாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது.

பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் கோவில் என்ற பெயரில் மருதமலையில் உள்ளது. ஜீவசமாதி அடைந்த இடங்களாக துவாரகை, மருதமலை, விருத்தாச் சலம், சங்கரன் கோவில் ஆகிய 4 ஊர்களையும், ஐந்தாவது முறை சித்தியடைந்த இடம் என திருக்கடவூர் மயானம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மருத மலைக்கு வழிபாட்டுக்கு வரும் அனைவருக்கும் அனைத்து அருளையும் வளங்களையும் வழங்கி அருள் புரிந்து வந்துள்ளார். மருதமலையில் அவர் தவம் செய்த இடத்தில் சுயம்புவாக தோன்றிய நாகமும் அதேபோல சுயம்பு சிவலிங்கம் இன்றுவரை பக்தர்களால் வழிபடப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் குகையில் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று குரு பூஜை மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அன்று காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 16 திரவியங்களால் அபிஷேகம் செய்து பாம்பாட்டி சித்தருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த வருடம் பாம்பாட்டி சித்தருக்கு குருபூஜை கார்த்திகை மாதம் 17&ந்தேதியாகும். அதாவது டிசம்பர் மாதம் 2.12.2020 அன்று மிக விமர்சையாக நடைப்பெற உள்ளது.

Similar News