சபரிமலையில் கடந்த 12 நாட்களில் ரூ.63 கோடி வருவாய்
- கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
- அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது.அன்றைய நாள் முதல் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.
முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் படிப்படியாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம் போர்டு செய்துள்ளது.
சீசன் தொடங்கிய 12 நாட்களில் சபரிமலைக்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 437 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 லட்சத்து 59 ஆயிரத்து 515 அதிகம். இது போல வருவாயும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடியாக வருவாய் உள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.