அடி முடி காண முடியாத அண்ணாமலையார் தான் `லிங்கோத்பவர்'
- லிங்கோத்பவர் சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும்.
- பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும்.
பெரும்பாலான சிவாலயங்களில் கருவறையைச் சுற்றிவரும் போது, சன்னிதிக்கு நேர் பின்புறம் 'லிங்கோத்பவர்' இருப்பதைக் காணலாம். இவரே அடி முடி காண முடியாத அண்ணாமலையார். ஆம்.. இவரது சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும்.
அதனும் அவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும். அவரது தலைப்பகுதியை ஒட்டி அன்னமும், கால் அடியில் பன்றியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
விஷ்ணுவும், பிரம்மாவும் இறைவனின் அடி முடியைக் காண்பதற்காக சென்ற நிகழ்வை கண் முன் நிறுத்தும் வகையில்தான் இந்த 'லிங்கோத்பவர்' சிற்பம் அமைந்திருக்கும்.
சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவம் கொண்டது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால் வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.
சிவனும் அதே போல, ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதை உணர்த்தவே, அவா் சிவலிங்க வடிவமாகவும், லிங்கோத்பவர் வடிவமாகவும் அருள்கிறார்.
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் ஒளி வடிவில் ஈசன் காட்சி கொடுத்த தினம் சிவராத்திரி என்கிறார்கள். அந்த காலத்தை 'லிங்கோத்பவர் காலம்' என்றும் சொல்வார்கள்.
இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையான நேரமே லிங்கோத்பவர் காலம். ஆண்டு தோறும் வரும் மகா சிவராத்திரி அன்று, இந்த நேரத்தில் லிங்கோத்பவர் அருள்காட்சி தருவார்.