நாகையில், சிவபெருமானுக்கு தங்கமீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி
- தங்க மீனை கடலில் விட்டு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி.
- அதிபத்த நாயனார் அதை கடலில் விட்டு இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை நம்பியார் நகரில் இருந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த அதிபத்த நாயனார், தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரிய மீனையும் மற்றும் முதல் மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.
ஒரு நாள் அதிபத்த நாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல், பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன்மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார்.
இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார். வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்த நாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.
அவரது அன்பில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர்.
பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.