கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
- திருவிழா இன்று தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை நடக்கிறது.
- 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது கூடலழகர் பெருமாள் கோவில். இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கடக லக்கனத்தில் கொடியேற்றப்படுகிறது. அங்கு ஸ்ரீதேவி, பூதேவி வியூக சுந்தரராஜ பெருமாள் அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். கொடியேற்றத்திற்கு பிறகு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
விழாவையொட்டி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. அதைதொடர்ந்து 5-ந் தேதி தசாவதாரம் நடக்கிறது. அதற்காக சுவாமி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு இரவு தசாவதாரத்தில் காட்சி அளிப்பார்.
6-ந் தேதி காலையில் கருட வாகனத்திலும், மாலையில் குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் செல்வி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.