வழிபாடு

திருவிளக்கு பூஜை நடைபெற்றதையும், அதில் திரளான பெண்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.

அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி கோவிலில் ரோகிணி திருவிழா

Published On 2023-03-04 04:43 GMT   |   Update On 2023-03-04 04:43 GMT
  • தங்க வாகனத்தில் சாமி பவனி வரும் நிகழ்ச்சி 7-ந்தேதி நடக்கிறது.
  • 8-ந்தேதி கொடி இறக்கம், உச்ச பூஜை அன்னதானம் நடக்கிறது.

அதங்கோடு அனந்தநகர் மாயா கிருஷ்ணசாமி கோவிலில் 98-வது ரோகிணி திருவிழா, இந்து சமய மாநாடு கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முதல் நாள் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், அபிஷேகம், கலச பூஜை, மாலை 5.30 மணிக்கு உறி அடி சிறப்பு பூஜைகள் மற்றும் வெள்ளிமலை சுவாமி ஜி சிவாத்மானந்த ஜி மகராஜ் நடத்திய பாகவத வரலாறும், நேற்று 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் சாமி எழுந்தருளல், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவின் 6-ம் நாளான இன்று(சனிக்கிழமை) காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், உஷபூஜை, சாமி எழுந்தருளல், அன்னதானம், தீபாராதனை, புஷ்பாபிஷேகம், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை சாமி எழுந்தருளல், ஆயில்ய பூஜை, கலச அபிஷேகம், அத்தாள பூஜை, சினிமா டிக் மெகா ஷோ நடக்கிறது.

விழாவில் 6-ந்தேதி இரவு 7.30 மணிக்கு பவுர்ணமி பூஜை, 8 மணிக்கு மகளிர் சமய மாநாடு, 9 மணிக்கு சிறப்பு பூஜை, சாமி எழுந்தருளல், 10 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7-ந்தேதி காலை அபிஷேகம், உஷ பூஜை, சிறப்பு தீபாராதனை, சந்தனக்கூடம் நேர்ச்சை, சாமி எழுந்தருளல், கலச பூஜை, கலச அபிஷேகம், உச்ச பூஜை, மதியம் 1.45 மணிக்கு தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசாமியும், சாமுண்டேஸ்வரி தேவி, புவனேஸ்வரி தேவியும் அலங்கார வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். ஊர்வலமானது முத்துக்குடை, நையாண்டி மேளம், யானை, சிங்காரி மேளம், செண்டை மேளம், 18 விளக்கு கட்டுகள், அலங்கார ரதங்களுடன் ஆனந்த நகர், தேவிநகர், குமரபுரி, மாஞ்சிவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, பாலவிளை, ஈர்த்த விளை, மடிச்சல் கறச்சிவிளை வழியாக கோவில் சன்னதியை அடைகிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, சாமி எழுந்தருளல், 1 மணிக்கு பரிசு வழங்குதல், 1.30 மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது.

விழாவின் 10-ம் நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேக உறியடி, உஷ பூஜை, கொடி இறக்கம், கலச பூஜை, கலச அபிஷேகம், உச்ச பூஜை அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

Similar News