மோட்சத்தை அருளும் தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர்
- பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று.
- பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
கோவில் தோற்றம்
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரு பாடல்பெற்ற தலங்கள் உண்டு. ஒன்று சென்னை திருவள்ளூர் அருகிலும், மற்றொன்று சீர்காழிக்கு அருகிலும் உள்ளது. எனவே திருவள்ளூர் அருகில் இருப்பதை 'வடதிருமுல்லைவாயில்' என்றும், சீர்காழி அருகில் உள்ளதை 'தென்திருமுல்லைவாயில்' என்றும் குறிப்பிடுவர்.
தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில் தென்திருமுல்லைவாயில் திருத்தலமானது, சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 7-வது தலமாகும். இத்தல இறைவன் 'முல்லைவனநாதர்', இறைவி 'அணிகொண்ட கோதையம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக முல்லைக்கொடி உள்ளது. இங்கே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
தலவரலாறு
கரிகால்சோழனின் பாட்டன் முதலாம் கிள்ளி வளவன், சரும நோயால் மிகவும் வேதனையுற்றான். நோய் தீர அரண்மனை வைத்தியர்கள் தீர்த்த யாத்திரையுடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினர்.
அதன்படி இவ்வாலயத்திற்கு கடல் நீராடுவதற்காக மன்னன் வந்தான். அக்காலகட்டத்தில் இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகள் நிறைந்திருந்தது. மன்னனும் பரிவாரங்களும் வந்த குதிரையின் குளம்பில் முல்லை கொடிகள் சுற்றிக்கொண்டன. இதனால் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தும்படி மன்னன் உத்தரவிட்டான்.
இதையடுத்து காவலர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டனர். மன்னனும் தன் வாளால் சில முல்லைக்கொடிகளை வெட்டினான். அப்போது ஓரிடத்தில் வாள் பட்டு, ரத்தம் பெருக்கெடுத்தது. இதனால் மன்னனும், மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ரத்தம் வந்த இடத்தில் முல்லைக் கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு மன்னன் அதிர்ந்தான். ஏற்கனவே சரும நோயால் அவதிப்படும் நிலையில், சிவலிங்கத்தை வேறு வாளால் வெட்டி விட்டோமே என்று மன்னன் கலக்கம் கொண்டான்.
இதற்கு பரிகாரமாக தன்னைத் தானே வாளால் வெட்டிக்கொள்ள முயன்றான், மன்னன். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து அருளினார். மன்னனின் சரும நோயும் அகன்றது.
இதையடுத்து அவ்விடத்தில் சுயம்பு லிங்கத்தைக் கொண்டே ஒரு ஆலயத்தை அமைக்க மன்னன் முடிவெடுத்து, அந்தப் பணியை சிறப்பாக முடித்தான். அதுவே சீர்காழி அருகே உள்ள தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் திருக்கோவிலாகும்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பல்வேறு மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள்.
ஆலய அமைப்பு
இந்த கோவில் முகப்பில் ஏற்கனவே இருந்த கல்ஹாரத்தின் மீது, சமீப குடமுழுக்கின்போது கட்டப்பட்ட ஒரு சிறிய நிலை கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தில் சிவசக்தி சமேதராய் ரிஷபாரூடரும், அவரின் இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்திற்குள் நுழைய கொடி மரத்து மண்டபம் உள்ளது. மிகப்பெரிய அந்த மண்டபத்துள் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமான் இடம்பெற்றுள்ளனர். அதனை அடுத்து மகாமண்டபம், அதற்கு செல்லும் வழியின் அருகில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர்.
மகாமண்டபத்தில் இருந்து அர்த்த மண்டபம் செல்லும் வழியில் துவாரபாலகர்கள் காவல்புரிய, அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் மிகப்பெரிய திருமேனியினராய் முல்லைவன நாதர் சுயம்புலிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரின் மீது வாள் பட்ட அடையாளம் காணப்படுகிறது.
சுவாமி சன்னிதிக்கு வடபுறத்தில் தனி சன்னிதியில், அணிகொண்ட கோதை அம்மன் அருள்கிறார். சுவாமியின் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரரும், அம்பாள் கருவறை கோட்டத்தில் துர்க்கா பரமேஸ்வரியும் உள்ளனர்.
பிரகாரச் சுற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எட்டு சன்னிதிகளில் முறையே விநாயகர், நால்வர், அப்பூதி அடிகள், பெருமாள், மதுரபாஷினி, தல வரலாற்று சிற்பம், வள்ளி தெய்வானை உடனாய முருகப்பெருமான், கஜலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரகார வடக்குச்சுற்றில் வசந்த மண்டபமும், கிணறும், ஈசானிய திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் பைரவரும், ஆலய வாசலின் உட்புறம் சூரியன் மற்றும் சந்திரனும் உள்ளனர்.
இக்கோவிலின் கிணற்றில் கங்கை ஊற்றெடுப்பதாக நம்பப்படுகிறது. பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று. சிதம்பரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, பல்லவனேசுவரம் ஆகியவை மற்ற நான்கு தலங்கள் ஆகும்.
சூரிய கிரகண நாள், அமாவாசை ஆகிய தினங்களில் இத்தல இறைவனை, முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து வழிபட்டால், செல்வச் செழிப்பும், நிம்மதியும் வந்துசேரும். அதோடு முக்தியும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. அதோடு சித்திரை புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி நடராஜர் வழிபாடு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கின்றன.
இரண்டு காலை பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை ஓரத்தில் தென்திருமுல்லைவாயில் இருக்கிறது.