வழிபாடு

பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஓலைச்சுவடிகள்.

ராமேசுவரம் கோவிலில் பழமையான ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-03-23 08:39 GMT   |   Update On 2023-03-23 08:39 GMT
  • ராமேசுவரம் கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
  • ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர்.

அகில இந்திய புண்ணியத்தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத்தில் ஒன்றாகவும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகின்றது. அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய புண்ணிய தலமாகவே ராமேசுவரம் கோவில் இருந்து வருகின்றது.

இவ்வளவு பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். அதுபோல் இந்த கோவிலில் ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்களின் பங்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கோவில் உருவான காலத்தில் கோவிலின் ஆகம விதிமுறைகள், வரலாறு, பட்டயங்கள் உள்ளிட்ட பலவிதமான தகவல்கள் ஓலை சுவடிகளிலே எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு ராமேசுவரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கோவிலின் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் ஆவண அறையிலுள்ள ஓலைச்சுவடிகளை சரிபார்க்கும் பணியானது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர். இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து துணி ஒன்றில் அடுக்கி வைத்து கட்டி ஆவண அறையில் உள்ள பீரோ ஒன்றில் மீண்டும் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் 308 ஓலைச்சுவடிகள் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் கோவிலில் கணக்கு வழக்குகள் அனைத்தும் தற்போது கம்ப்யூட்டரிலும், இதற்கு முன் நோட்டுகளிலும் எழுதி அது பராமரிக்கப்பட்டு வருகிறது. இதே போல் பழைய காலங்களில் ஓலைச்சுவடிகளில் தான் கோவிலின் அனைத்து கணக்கு வழக்குகள், நிலங்கள் மற்றும் வருவாய்கள், கோவில் திருவிழாக்கள், வரலாறுகள் போன்ற அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். ஆகவே ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தையும் சரியாக படித்து அதனை அனைவருக்கும் புரியும்படி மக்களின் பார்வைக்கு வைக்க இந்து சமய அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அந்த ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ள அனைத்து விதமான தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள தகவல்களை பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் ராமேசுவரம் கோவிலின் சிறப்பு இன்னும் அதிகமாகும். அதனால் உடனடியாக ராமேசுவரம் கோவிலில் உள்ள அனைத்து விதமான ஓலைச்சுவடிகளையும் பக்தர்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் பழமையான 308 ஓலைச்சுவடிகள் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு சரி பார்த்து படித்து ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றுள்ள தகவல்களை பக்தர்களுக்கும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அதுபோல் இந்த ஓலைச்சுவடிகளை பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News