எந்த ஓரையில்... என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
- ஓரையை அறிந்து சுபகாரியங்களை செய்தால் சிறப்பாக இருக்கும்.
- வாரத்தில் உள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ஓரை நேரம் உள்ளது.
பொதுவாக எந்த நற்காரியம் செய்யத் தொடங்கினாலும், அது வளர்பிறையா? சுப கிரக ஓரை வருகிறதா? என்று தினசரி காலண்டரில் பார்த்து செய்யத் தொடங்குவது நல்லது. பொதுவாக ஒரு சுபகாரியம் தொடங்குவதற்கும், திருமணம், புதிய கட்டிட வேலை ஆகியவற்றுக்கும் பெரியவர்கள் ஓரை பார்த்து செய்வது நல்லது என்பார்கள்.
'ஹோரா' என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்தது தான் தமிழில் 'ஓரை' என்றாகி விட்டது. ஓரை என்பது ஒரு மணி நேரத்தை குறிக்கும். இந்த ஓரையில் ஒவ்வொரு கிரகங்களின் பலன் இருக்கும். அதில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் ஓரை பார்ப்பது அவசியம். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் ஓரைகளில் எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓரை என்றால் ஆதிக்கம் எனப் பொருள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஓரையை அறிந்து சுபகாரியங்களை செய்தால் சிறப்பாக இருக்கும். வாரத்தில் உள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ஓரை நேரம் உள்ளது. காலையில் சூரியன் உதயமானது முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஓரை தொடங்கும். மொத்தம் ஏழு விதமான ஓரைகள் உள்ளன. மேலும் ஓரைகள் சுப ஓரைகள், அசுப ஓரைகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சுப ஓரைகள் :
சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் ஆகிய ஓரைகள் சுப ஓரைகள் ஆகும்.
அசுப ஓரைகள் :
சூரியன், செவ்வாய், சனி ஆகிய ஓரைகள் அசுப ஓரைகள் ஆகும்.
ஒவ்வொரு ஓரையிலும் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?
சூரிய ஓரை :
உயர் அதிகாரிகளை சந்திக்க, அரசு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கும், சிகை அலங்காரம் மேற்கொள்ளவும், நதிகளில் நீராடவும், திருத்தலங்களுக்கு செல்லவும், தர்ம காரியம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பண காரியம் மேற்கொள்வதற்கும், வழக்கு தொடர்பான விஷயங்கள் மேற்கொள்ளவும் சூரிய ஓரை சிறப்பானதாக இருக்கும்.
சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரை நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. பிரயாணங்கள் மேற்கொள்ளவும், திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதலுக்கு உகந்தது. பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சந்திர ஓரை சிறந்த ஓரையாகும்.
செவ்வாய் ஓரை :
நிலம் வாங்குவது-விற்பது, அக்ரிமெண்ட் போடுவது, சகோதர மற்றும் பங்காளி பிரச்சனைகள், சொத்துக்களை பாகம் பிரிப்பது, உயில் எழுதுவது, ரத்த மற்றும் உறுப்பு தானம் செய்தல், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் செவ்வாய் ஓரையில் மேற்கொள்ளலாம்.
புதன் ஓரை :
கல்வி தொடர்பான வேலை தொடங்குவதற்கும், மற்றவர்களிடம் ஆலோசிப்பதற்கும், அலுவலகங்கள் சார்ந்த பணிகள், பயணங்கள் மேற்கொள்ளவும், வித்தைகள் பயிலவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் புதன் ஓரை உகந்தது.
குரு ஓரை :
தொடங்கும் நற்காரியத்தின் மூலம் எதிர்பார்த்த முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். ஆன்மிக பெரியோர்களை சந்திக்கவும், வியாபாரம், விவசாயம் மேற்கொள்ளவும், ஆடை ஆபரணப் பொருட்கள் வாங்கவும், வீடு, மனை வாங்கவும்-விற்கவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் குரு ஓரை உகந்தது.
சுக்கிர ஓரை :
திருமணம் தொடர்பாக பேசவும், பிறருடைய உதவிகளைப் பெறவும், விருந்து உண்பதற்கும், பழைய கடன்களை வசூலிக்கவும், மருந்து சாப்பிடவும், புதிய வாகனங்களை வாங்கவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் சுக்கிர ஓரை உகந்தது.
சனி ஓரை :
வீட்டை சுத்தம் செய்தல், மனைகள் சோதனை இடுதல், எண்ணெய் தொடர்பான காரியம், கனரக இயந்திரங்கள் இயக்குதல், நடைபயணம் மேற்கொள்வது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல் இவற்றையெல்லாம் சனி ஓரையில் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஓரைக்கும் உரிய கடவுளை வணங்கி, அதற்குரிய பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.