வழிபாடு

திருவள்ளூர் லட்சுமி வராஹன் கோவில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-08-20 07:15 GMT   |   Update On 2023-08-20 07:38 GMT
  • யாக சாலையில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகும்.இந்த கோவிலின் உபகோவிலான ஸ்ரீ லட்சுமி வராஹன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஹிருதாபநாசினி குளக்கரை அருகே அமைந்து உள்ளது. சிதிலமடைந்து இருந்த இந்த கோவிலின் மூலவர் விமானம், ராஜகோபுரம் உள்பட கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பகுதியும் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாக சாலையில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

பின்னர் கோவில் மூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரம் விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

தொட்ந்து ஸ்ரீ லட்சுமி வராஹன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. உற்சவர் வீரராகவ பெருமாள், லட்சுமி வராஹன் சன்னதியில் எழுந்தருள சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News