வழிபாடு

புதுச்சேரிக்கு புகழ் சேர்க்கும் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன்

Published On 2023-08-17 06:43 GMT   |   Update On 2023-08-17 06:43 GMT
  • வீராம்பட்டினம் ஊரின் நடுவில் அமைந்துள்ளது தான் செங்கழுநீர் அம்மன் கோவில்.
  • வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் புகழ் ஓங்கி ஒலித்தது.

கடலும் நதியும் கூடும் இடங்களில் இருந்த கடற்கரை நகரங்கள் பட்டினங்கள் என்றழைக்கப்பட்டன.

இப்பட்டினங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் வாணிபம் செய்தனர். சீனா, ரோம், எகிப்து, இலங்கை, கிரேக்கம், சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் இருந்து வந்த பலரும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை விற்கவும், தேவையானவற்றை வாங்கவும் இப்பட்டினங்களுக்கு வருகை தந்தனர்.

அப்படிப்பட்ட துறைமுக பட்டினங்களில் ஒன்றுதான் வீராம்பட்டினம். வீராம்பட்டினம் வரலாற்றில் இடம் பெற்ற ஊராகும். வீராம்பட்டினம் என்ற பெயர் வந்தமைக்கு பலவித கருத்துக்கள் கூறப்படுகின்றன.

வெளிநாட்டினரின் பொருட்களை பாதுகாப்பதற்காக வீரர்கள் குழு ஒன்று இருந்ததாகவும், அக்குழுவினர் தங்கி இருந்த பகுதியே வீரர்பட்டினம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி வீராம்பட்டினம் என்று அழைக்கப்படுவதாகவும் சிலர் கூறுவர்.

புதுச்சேரிக்கு தெற்கே 8 கி.மீ தூரத்தில் வங்க கடற்கரையோரம் கடலூருக்கு வடக்கே 20 கி.மீ தூரம் இதன் நடுவே கிழக்கே வங்காள விரிகுடா கடல் மேற்கே பசுமையான வயல்வெளிகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வடக்கே ஒரு ஆறு, தெற்கே ஒரு ஆறு இதன் நடுவிலே அமைந்தது தான் வீராம்பட்டினம்.

வீராம்பட்டினம் ஊரின் நடுவில் அமைந்துள்ளது தான் செங்கழுநீர் அம்மன் கோவில். இன்று உலக மக்களால் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலாகும்.

உறையூரை தலைநகரமாகவும் காவிரி பூம்பட்டினத்தை துறைமுகமாகவும் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர் காலத்திலும் அதற்கு பின்னால் ஆண்ட பல்லவர் மன்னர் காலத்திலும் சிறப்பு வாய்ந்த, சக்தி வாய்ந்த அம்மனாக செங்கழுநீர் அம்மன் திகழ்ந்தார்.

மேலும் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை ஆட்சி செய்யும் போது வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் புகழ் ஓங்கி ஒலித்தது.

சங்க காலத்து புலவர்கள் வீரை வெளியனார், வீரை வெளியன் தித்தனார் பிறந்த பூமி வீராம்பட்டினம். வரலாற்று புகழ்கொண்ட இவ்வீராம்பட்டினத்தில் மக்களை தனது சக்தியால் கவரும் செங்கழுநீர் அம்மனின் திருத்தலம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News