கணபதி அக்ரஹாரம், மெலட்டூர் விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா தொடங்கியது
- 28-ந்தேதி தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது.
- 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
அதையடுத்து மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது. 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டமும், 31-ம் தேதி(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவும் நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி கண்ணாடி பல்லக்கில் சாமி வீதியுலா நடக்கிறது.
இதேபோல மெலட்டூரில் உள்ள சி்த்திபுத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் பிரமோற்சவம் விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சித்திபுத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் வெள்ளி பல்லக்கு, ஓலை சப்பரம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார்.
விழாவின் 7-ம் நாள்(28-ந் தேதி) தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாணமும், 30-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி குமார் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.