கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனி

Published On 2022-11-23 15:21 GMT   |   Update On 2022-11-23 15:21 GMT
  • முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் ஜெர்மனி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
  • இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப்-இ பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின. நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள், இரண்டாவது பாதியிலும் ஜப்பானை முன்னேற விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.

75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. 

Tags:    

Similar News