ஓடுவதை விட நடப்பது சிறந்தது... ஏன் தெரியுமா?
- உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
- இளம் வயதினர் ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சியை நாடுகிறார்கள்.
காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். முதுமை பருவத்தை எட்டுபவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இளம் வயதினர் ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சியை நாடுகிறார்கள். இதில் எந்த பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இரண்டு பயிற்சிகளுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானவை. குறிப்பாக இதயத்திற்கு சிறந்தவை.
அதனால்தான் இதய நோய் நிபுணர்கள் நடைப்பயிற்சி அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சியை செய்வதற்கு பரிந்துரைக்கிறார்கள். இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும்போது இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தமனியின் செயல்பாடுகளை தடுக்கும் நச்சுகள் அப்புறப்படுத்தப்படும். பக்கவாதம், இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.
ஓடுவதை விட நடப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ஓடும்போது இதய தசைகளில் அழுத்தம் ஏற்படும். அதே சமயம் நடப்பது இதயத்தில் மிக குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அகால மரணம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.
2013-ம் ஆண்டு 33,060 ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 15,045 நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இரு செயல்பாடுகளையும் கண்காணித்தபோது ஓடுவதை விட, விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்பது தெரியவந்தது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து ஓடுவதன் மூலம் 4.2 சதவீதமும், நடப்பதன் மூலம் 7.2 சதவீதமும் குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர முழங்கால், கணுக்கால் மற்றும் முதுகுவலி பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் நடைப்பயிற்சி நிவாரணம் அளிக்கக்கூடியது. உடல் பருமனானவர்களுக்கும் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி உதவும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.