- காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
காலையில் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்படி இருப்பது சிறப்பானது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாக தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதன் இயக்கமும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடனடியாக கிடைக்கச் செய்யும். மேலும் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை குடல் அசவுகரியத்திற்கு ஆளாகுவதை தவிர்க்கவும் முடியும். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.
பப்பாளி:
பப்பாளியில் புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் ஏ, பி, சி அதிகமாக இருப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வழிவகை செய்யும். குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி ஜூஸ் பருகுவது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தடுக்க உதவி புரியும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கும். இது நார்ச்சத்துமிக்க உணவுப்பொருளாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அதனை சாப்பிடுவது குடல் இயக்கம் எளிமையாக நடைபெறுவதற்கு உதவும். கார்போஹைட்ரேட்டை சிதைக்கும் செயல்முறையையும் எளிமையாக்கும்.
பீட்ரூட்:
இதிலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கம் எளிதாக நடைபெறுவதற்கு உதவிடும்.
ஆப்பிள்:
இதில் நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், இரைப்பை, குடல் நலனுக்கு உகந்தது. இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.
புரோக்கோலி:
புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறவும், செரிமான பாதையை பராமரிக்கவும் உதவி புரியும். நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.