பொது மருத்துவம்

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?

Published On 2023-08-25 08:04 GMT   |   Update On 2023-08-25 08:04 GMT
  • மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
  • செரிமான அமைப்பு வழியாகத்தான் நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது.

மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். பல உணவுகளில் இருந்து இந்த நார்சத்துக்களை நம்மால் பெற முடியும். ஆனால் நமது உடலால் இந்த நார்ச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சவோ அல்லது ஜீரணிக்கவோ முடியாது. செரிமான அமைப்பு வழியாகத்தான் இந்த நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது. குடல் இயக்கங்களுக்கு ஏற்றதாக நார்ச்சத்து பார்க்கப்பட்டாலும், அதிகப்படியாக இதை எடுத்துக்கொள்வதால் நமக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும். எனவே இத்தகைய நார்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சினைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டால், நீரில் கரையக்கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் என இரு வகைகள் உள்ளது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நீரில் கரையாத நார்சத்துக்கள் முறையாக உணவுடன் செரிக்கப்படுவதில்லை. இவை நேரடியாக இரைப்பை குடல் வழியாக பயணித்து மலத்தில் கலக்கிறது. இவை மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

நீங்கள் நார்ச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், பருப்பு வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள், விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நார் சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால், சில எதிர்மறை பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.

அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உட்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் இவை துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சில தாது வகைகளை உறிஞ்சுவதில் சிக்கலை உண்டாக்கலாம். எனவே இவை இரைப்பை குழாயில் சேதத்தை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளை உறிஞ்சுவதில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். சில மருந்துகளின் செயல் திறனையும் இது பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகப்படியான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அதிகப் படியான தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை எடுப்பதை தவிருங்கள். நடைப்பயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறிப்பாக மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

Tags:    

Similar News