செய்திகள் (Tamil News)

மருந்தாளுனர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்- எம்.முகம்மது யூசுப் கோரிக்கை

Published On 2018-09-26 10:03 GMT   |   Update On 2018-09-26 10:03 GMT
மருந்துகள் கண்டுபிடிக்கும் மருந்தாளுனர்களுக்கு உலக வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் அங்கீகாரம் மற்ற நாடுகளிலும் கிடைக்க வேண்டும் என மருந்து உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளையின் செயலாளர் எம்.முகம்மது கூறியுள்ளார்.
சென்னை:

மருந்து உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளையின் செயலாளர் எம்.முகம்மது யூசுப் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 25-ந்தேதி உலகமெங்கும் மருந்தாளுனர் தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுப்புற சூழல், ஒவ்வொருவரின் உடல் கூறுகள், உணவு பழக்கங்கள் நமது வாழ்வில் ஏற்படுத்தும் தாங்கள்கள் புதுப் புது வியாதிகளை தோற்றுவிக்கின்றன. அப்படிப்பட்ட வியாதிக்கெல்லாம் மருந்துகளை கண்டுபிடிக்கும் பெரும் பொறுப்பில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உடலுக்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகள், வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை எதிர்கொண்டு கையாண்டு அதன் வீரியத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கண்டுபிடித்து வருகின்றனர். அவ்வப்போது பரவும் கொடிய நோய்களுக்கும் உடனுக்குடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பக்க விளைவுகள் இல்லாத நல்ல மருந்துகளை கண்டுபிடிக்கின்றனர். வியாதிகளையும் கட்டுப்படுத்துகின்றனர்.

ஆனால் அவர்களின் தியாகம் வெளியுலகிற்கு தெரிவதே இல்லை. அவர்கள் பற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மருந்துகள் கண்டுபிடிக்கும் மருந்தாளுனர்களுக்கு உலக வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் அங்கீகாரம் மற்ற நாடுகளிலும் கிடைக்க வேண்டும்.

மருந்தாளுனர் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் மருத்துவர்கள் எப்படி மருந்தை பரிந்துரைக்க முடியும். மருந்துகள் பற்றி விவரம் சொல்பவர்களே மருந்தாளுனர்கள் தானே.

உலகம் முழுவதும் மக்கள் நலனுக்காக பாடுபடும் மருந்தாளுனர்களின் தியாகத்தை போற்றுவோம். நோயில்லா உலகம் படைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். எல்லோருக்கும் மருந்தாளுனர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News