செய்திகள்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி - அறநிலையத்துறை அதிகாரி கவிதா சஸ்பெண்ட்

Published On 2018-10-11 06:25 GMT   |   Update On 2018-10-11 06:25 GMT
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கில் கைதான அறநிலையத்துறை அதிகாரி கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #KancheepuramTemple
சென்னை:

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது.

இந்து அறநிலையத்துறை கமி‌ஷனர் உத்தரவின் பேரில் சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.



இதில் சிலை செய்ததில் 5.75 கிலோ அளவுக்கு தங்கம் பயன்படுத்தாமல் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.

அதன் பேரில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா, செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார். 6 பேர் முன் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்து அறநிலையத்துறை கூடுதல் கமி‌ஷனர் கவிதா ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது.

இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிதா வீட்டுக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. மாறாக பணியில் இருந்து விலக்கப்பட்டார். அவரது பொறுப்பு, கூடுதல் கமி‌ஷனர் திருமகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவிதாவை சஸ்பெண்ட் செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் வெங்கடேசன் பிறப்பித்தார். #KancheepuramTemple

Tags:    

Similar News