- மணல்ேமடு பகுதியில் போலீசார் தீவிரசோதனையில் ஈடுப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே கடலங்குடி, குறிச்சி ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது கடலங்குடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், கடலங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் ராஜேஷ் (வயது 25) மற்றும் கடலங்குடி திருமேனியார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதேபோல் குறிச்சி பாலம் அருகே கண்காணித்தபோது குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஸ்டாலின் (35) என்பவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், கலியமூர்த்தி, ஸ்டாலின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.