தென்கரைக்கோட்டை ஏரியில் விரிசல்- பாதுகாப்பு கருதி போக்குவரத்து துண்டிப்பு
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
- போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தொடர் மழை காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பிய நிலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி போக்குவரத்து நிறுத்தம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு ஏரியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் 13 மில்லி கன அடி தண்ணீர் தேக்கி வைக்கவும், 20 அடி உயரத்தைக் கொண்டது.
ஃபெஞ்சல் புயல் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் வாணியாறு அணை அதன் முழு கொள்ளளவான 63.30 அளவை எட்டியது. தற்போது அணைக்கு 375கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்புக்கு கருதி தினமும் 1125 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெங்கட சமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி ஏரி நிரம்பி வாணியாற்று நீர் தற்போது தென்கரைக் கோட்டை ஏரியின் முழு அளவை எட்டியுள்ளது.
இதை அடுத்து திடீரென நேற்று அணையின் கிழக்குப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில்அரூர் கோட்டாட்சியர் சின்னசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஏரி பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு தீவிர பாதுகாப்பு பணியை எடுக்க தொடங்கினர்.
அதன்படி உடனடியாக ராமியமபட்டி- ஏ. பள்ளிப்பட்டி நெடுஞ்சாலை உடனடியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது,
போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது, அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் உடனடியாக ஏரியில் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடைகள், பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெறியேற்றப்பட்டனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தென்கரைக்கோட்டை ஏரியில் பாதுகாப்புக் கருதி ஏரிக்கு வரும் நீர் பெருமளவு உபர் வெளியேற்றும் கால்வாய் வழியாக சில அடைப்புக்களை எடுத்து விட்டு கல்லாற்றில் தண்ணீர் அனுப்பப்பட்டு அரூர் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுப்பணித் துறையினர் விரிசலை தடுக்கும் பொருட்டு உடனடியாக 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயார் செய்து ஏரியில் விரிசல் பகுதியில் அடுக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தென்கரைக்கோட்டை ஏரியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்ற செய்தி காட்டுத் தீயாக இந்தப் பகுதியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.