மேட்டுப்பாளையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர்
- சிவகுமார் வச்சினம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் பஸ்சில் சென்றார்.
- பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிவகுமார் (42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மேட்டுப்பாளையம் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நேற்று வச்சினம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் பஸ்சில் பணியாற்றினார். சிறுமுகை சாலை பிரிவு பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு மண்டி அருகே வந்த போது சாலையின் நடுவே ஒருவர் சென்று கொண்டிருந்தார்.டிரைவர் சிவகுமார் ஹாரன் அடித்தும் ஒதுங்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கிச்சென்ற சிவகுமார் அவரிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அந்த நபர் சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் பலமாக தாக்கினார். இதில் டிரைவர் சிவகுமாருக்கு இடது கண்ணின் அருகே காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பஸ் டிரைவரை தாக்கியது மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர். புரம், அண்ணாஜி ராவ் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (34) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.