கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
- திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
தக்கலை:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தக்கலை, திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 3 பேர் போலீசாரிடம் சிக்கினார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 3 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜோகன் (27), கேரளாபுரத்தை சேர்ந்த அபினேஷ் (30), அடப்பு விளையை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களது வங்கி கணக்கையும் முடக்கினார்கள்.
கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜெயசேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.