உள்ளூர் செய்திகள்

போடிமெட்டு, குமுளி மலைச்சாலையில் பாறைகள், மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-12-13 06:34 GMT   |   Update On 2024-12-13 06:34 GMT
  • அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
  • வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.

கூடலூர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விடியவிடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் குமுளி-லோயர் கேம்ப் மலைச்சாலையில் அடுத்தடுத்து 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மரம் விழுந்ததால் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல அறிவுறுத்தினர். லோயர் கேம்புக்கு வந்த பல்வேறு வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.

அதனை தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வாகனங்கள் சென்றன. அதிர்ஷ்ட வசமாக மரம் விழுந்த போது வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு மலைப்பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு சாலைக்கு வந்தது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து ஊழியர்களின் உதவியோடு பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்தனர். இருந்தபோதும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.

Tags:    

Similar News