உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் தொடர் மழை முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு கூடுதல் நீர் வரத்து

Published On 2022-10-22 05:30 GMT   |   Update On 2022-10-22 05:30 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன.
  • நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. எனவே 2-ம் போக சாகுபடிக்கு முன் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பாார்த்துள்ளனர்.

கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன.

கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் சோத்துப்பாறை அணை நிரம்பி கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு, மூல வைகையாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேகமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 70 அடியில் நீர்மட்டம் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 70.93 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அணைக்கு 2131 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1319 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.408 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி பாசனத்திற்கும், 368 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.60 அடியில் நீடிக்கிறது. 251 கனஅடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் பாசனத்திற்கும் 221 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134.50 அடியாக உயர்ந்துள்ளது. 1731 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. எனவே 2-ம் போக சாகுபடிக்கு முன் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பாார்த்துள்ளனர். மேலும் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

பெரியாறு 8.8, தேக்கடி 1.8, கூடலூர் 2, உத்தமபாளையம் 7.2, வீரபாண்டி 4.6, வைகை அணை 2.6, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 16, அரண்மனைபுதூர் 0.2, போடி 7.2, பெரியகுளம் 24 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News