தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்த வாலிபரை மிதித்து கொன்ற யானை
- தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது.
- யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஈரோடு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. யானைகள் தோட்டத்துக்குள் புகுவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் காவலில் இருப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்த வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 25) என்ற வாலிபர் தோட்டத்தில் இரவு நேர காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் இவர் தினமும் இரவில் வந்து இங்கு படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் வெங்கடாசலம் தோட்டத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வெங்கடாசலம் தோட்டத்திற்குள் புகுந்தது. நள்ளிரவு என்பதால் வெங்கடாசலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் யானை வருவதை அவர் கவனிக்கவில்லை. தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடாசலம் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு அருகில் தோட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வெங்கடாசலம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தோட்டத்தில் யானை நிற்பதையும் பார்த்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், தீபந்தத்தை காட்டியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும், சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடாசலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அச்சத்துடன் உள்ளனர்.