தொடர் மழை எதிரொலியாக ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு
- கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மலைப்பகுதி, பவானிசாகர் அணை பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
கடந்த வாரம் 44 அடியில் இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரு வார தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 52.53 அடியாக உயர்ந்துள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணை நீர்மட்டம் பலத்த மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 37.40 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.39 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.