4 பெண்கள் உள்பட 7 பேர் கோவை சிறையில் அடைப்பு
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
- இதனையடுத்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியசேமூர் கல்லாங் கரடு ஸ்ரீராம் நகர், 8-வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (25). கூலி தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக செல்வகுமாரை உறவினர்கள் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, கண்ணையன் ஆகிய 8 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து ஈரோடு முதலாம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணையன் என்பவர் இறந்து விட்டார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதில் கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 2 ஆண்டு, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 3 ஆண்டு என மொத்தம் 5 ஆண்டுகள் கூடுதலாக ஜோதிமணி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.
இதனையடுத்து அவர்கள் 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.