பெருந்துறை பகுதியில் கனமழை- 6 குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
- பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியிலும் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், அந்தியூர், கோபி செட்டிபாளையம் பகுதிகளிலும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதிகளான தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3 மணிக்கு பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை மாலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக பெருந்துறை, காஞ்சிக்கோவில், பெத்தம்பாளையம், திங்களூர், நசியனூர், பணி க்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம், விஜயமங்கலம், புங்கம்பாடி போன்ற தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. புங்கம்பாடியில் உள்ள அணைக்கட்டு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கட்டு நிரம்பி அந்த உபரிநீர் அருகே உள்ள குளங்களுக்கு சென்றது.
பெருந்துறை அருகே தெற்கு பள்ளம், பெருந்துறை ரிங் ரோடு பகுதி, டைமன் சிட்டி பகுதி உள்பட பெருந்துறையில் உள்ள 6 குளங்கள் நேற்று பெய்த பலத்த மழையால் நிரம்பியது. இதன் உபரிநீர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டிற்கு சென்று சூரம்பட்டி அணைக்கட்டும் நிரம்பியது. 6 குளங்கள், அணைக்கட்டு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியிலும் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கவுந்தப்பாடி, சென்னிமலை, கொடுமுடி, பவானி, மொட க்குறிச்சி, பவானிசாகர், நம்பியூர், வரட்டுப்பள்ளம் என ஈரோடு புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் லேசான சாரல் மழையுடன் நின்றுவிட்டது. இதனால் மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் பெய்த மழையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-51, குண்டேரிப்பள்ளம்-25.20, கவுந்தப்பாடி-14, சென்னிமலை-12, கொடுமுடி-8.60, பவானி-6.40, மொடக்குறிச்சி-6, பவானிசாகர்-5, நம்பியூர்-3.10, வரட்டுப்பள்ளம்-3.