உள்ளூர் செய்திகள் (District)

தேயிலை கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய கோரி குன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு

Published On 2022-07-18 10:20 GMT   |   Update On 2022-07-18 10:20 GMT
  • தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரவேணு:

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காணவும், குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகளிடம் கேட்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட சிறுவிவசாயிகள் சங்கம் சார்பில் கோத்தகிரி அருகே கேர்கம்பை கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார். கேர்கம்பை ஊர்த்தலைவர் நஞ்சாகவுடர் அனைவரையும் வரவேற்றார்.தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

கூட்டத்தில் ஊட்டியில் அணிக்கொரை கிராமத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை ஒன்று திரட்டி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் உண்ணாவிரதம் நடத்தும் தேதியை தீர்மானிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நீலகிரியில் உள்ள சிறு குறு விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News