சென்னையில் அதிகாலை 1 மணிமுதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது
- ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் அகற்றம்.
- பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆலந்தூர்:
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று மாலை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலை யத்தில் உள்ள ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் இன்று (1-ந்தேதி) அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே விமான பயணிகள், தாங்கள் பயணம் செய்ய இருக்கும், விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படும் என்பதை கேட்டு அறிந்து கொண்டு, பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை முழுவதும் நின்றது. லேசான சாரல் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஓடுபாதையில் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மழையும் இல்லாததால் 3 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறு வனங்களின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் புயல் கரையைக் கடந்து வானிலை சீரடைந்து விட்டதால், முன்னதாகவே விமானங்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணி முதல் சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதுபற்றி பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.