உள்ளூர் செய்திகள்

விஷவாயு தாக்கி 3 பேர் பலி எதிரொலி- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பெங்களூர் நிபுணர் குழு ஆய்வு

Published On 2024-06-16 05:53 GMT   |   Update On 2024-06-16 05:53 GMT
  • கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறை நேரடியாக தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது.
  • இளநிலை பொறியாளர் ஒருவரை நியமித்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கடந்த 11-ந் தேதி விஷவாயு தாக்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலியானார்கள்.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சரிவர சுத்திகரிக்கப்படாததால் உருவான விஷவாயு பாதாள சாக்கடை வழியாக சென்று கழிவறைக்குள் புகுந்து உயிர்ப்பலி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

பொதுப்பணி சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினரும் அங்கு ஆய்வு நடத்தினார்கள். அப்போது பாதாள சாக்கடையில் உருவான ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயு தாக்கியதால் மூச்சு வாயு தாக்கியதால் மூச்சு திணறி அவர்கள் 3 பேரும் இறந்ததாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது வீடுகளில் கழிவறை அமைத்த பொதுமக்கள் பாதாள சாக்கடையில் விஷவாயு உருவானால் அது கழிவறைக்குள் வராமல் தடுக்கும் வாட்டர் சீல், ஷோக் பிட் ஆகிய அமைப்புகளை செய்ய தவறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பாதாள சாக்கடை திட்டங்களை பொறுத்த வரை கனகனேரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்பேட்டையில் இருந்து ரசாயன கழிவுகளும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து மருத்துவ கழிவுகளும் இரவு நேரத்தில் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இத்தகைய கழிவுகளால்தான் விஷவாயு உருவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எழுப்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறை நேரடியாக தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இளநிலை பொறியாளர் ஒருவரை நியமித்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது.

இதனிடையே நேற்று பெங்களூரை சேர்ந்த ரணதேவ் ஆனந்த் என்பவர் தலைமையிலான தனியார் நிறுவன குழு கனகனேரி சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக அவர்கள் தலைமை பொறியாளருடன் ஆலோசனையும் நடத்த உள்ளனர்.

மேலும் புதுவையில் உள்ள கழிவுநீர் வெளியேற்றம், சுத்திகரிப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐ.ஐ.டி. குழு மற்றும் சூரத் நிபுணர் குழுவுக்கும் அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News