பஸ் நிலையங்களை ரெயில் நிலையத்துடன் இணைக்க தாம்பரத்தில் ஆகாய நடைமேம்பாலம் திறப்பு
- ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் வகையில் ஆகாய நடைமேம்பால பணிகள் 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது.
- ஆகாய நடைமேம்பாலத்தில் 6 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை தாம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை தினமும் 1.75 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஏற்கனவே மேம்பாலம் இல்லாததால் பயணிகள் தாம்பரம் மாநகர பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்ல ஜி.எஸ்.டி. சாலையையே கடந்து சென்றனர். தினமும் 85 ஆயிரம் பயணிகள் 45 மீட்டர் அகலமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து சென்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. இதையடுத்து பயணிகள் வசதிக்காக அந்த பகுதியில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் வகையில் ஆகாய நடைமேம்பால பணிகள் 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது.
அதன்பிறகு பொதுமக்கள் வசதிக்காக நடை மேம்பாலம் திறக்கப்பட்டது. பின்னர் ஆகாய நடை மேம்பாலத்தை ரெயில் நிலையத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வேயிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்துக்காக மாநில நெடுஞ்சாலைத்துறை ரூ.20 கோடி செலவிட்டது. இதையடுத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஆகாய நடைபாதையை தாம்பரம் ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் முடிந்து பயணிகள் வசதிக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் மாநகர பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ஆகாய நடைமேம் பாலம் மூலம் பயணிகள் நேரடியாக தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சென்று வருகிறார்கள். இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் 6 எஸ்கலேட்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஒரு டிக்கெட் கவுண்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலம் 11 மீட்டர் அகலம் கொண்டது.
இந்த ஆகாய நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது ஜி.எஸ்.டி. சாலையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.