உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் கொட்டி தீர்த்த கனமழை: தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது

Published On 2024-11-08 04:58 GMT   |   Update On 2024-11-08 04:58 GMT

ஈரோடு:

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் திடீரென லேசான காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த மழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட் பகுதி அம்மா உணவகத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ள காடாக காட்சியளித்தது. இதனால் இந்த பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதுபோல் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வழக்கம் போல் மழைநீர் தேங்கி நின்று சேரும் சவுதியுமாக காட்சியளித்ததால் காய்கறிகள் வாங்க சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இங்கே லேசாக மழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சியளிப்பது தொடர்கதை ஆகி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, மாவட்டத்தில் 37.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 14.20 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பெய்திருந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஈரோடு-14.20, கொடுமுடி-6, பெருந்துறை-5, சென்னிமலை-2, பவானி-1.60, குண்டேரிப்பள்ளம்-1.20, பவானிசாகர் அணை-7.40.

Tags:    

Similar News