தென்காசி மாவட்டத்தில் கனமழை- பாவூர்சத்திரம் ரெயில்வே சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது
- தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
- சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
நாகல்குளம் பகுதி வழியாக குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஒரு சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் அதிகாரிகள் தலையிட்டு குளங்களுக்கு செல்லும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.