உள்ளூர் செய்திகள்

காசியின் லேப்டாப்-செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள்- நீதிபதி வேதனை

Published On 2022-06-30 10:15 GMT   |   Update On 2022-06-30 10:15 GMT
  • சோதனையில் சிக்கிய காசியின் லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன.
  • காசிக்கு எதிரான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

மதுரை:

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த வாலிபர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை மயக்கி, காதலிப்பதாக கூறி அவர்களை ஆபாச படங்கள் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காசி மீது சென்னை பெண் டாக்டர் உள்பட 8 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் காசி மீது 8 வழக்குகள்பதியப்பட்டன. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி காசி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களை கைது செய்தனர்.

மேலும் காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காசியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய காசியின் லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. மேலும் காசியுடன் பல பெண்கள் இணைந்திருந்த புகைப்படங்களும் இருந்தன.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள், இளம்பெண்கள் என ஏராளமானோரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி தகவல் வெளியானது. போலீஸ் காவலில் அவர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்தனர்.

காசிக்கு எதிரான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர். காசியின் லேப்டாப்பில் இருந்த தகவல்களை அழித்ததாகவே காசியின் தந்தை தங்கபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் சிறையில் உள்ள அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐேகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணை செய்யப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் அதிர்ச்சியான சம்பவங்களை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

வழக்கு விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார், காசியின் வீட்டில் இருந்து மொபைல் போனும், அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லேப்டாப்பை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது முதல் குற்றவாளியான காசி 100-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான முழு மற்றும் அரை நிர்வாண படங்கள் வீடியோ இருந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News