கோவில்பட்டி சிறுவன் கொலையில் விசாரணை தீவிரம்: உடலில் காயங்கள் இருப்பதாக போலீசார் தகவல்
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி. அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கும், அவர்களது மூத்த மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்த நிலையில் நேற்று காலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சிறுவன் கருப்பசாமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வாய் மற்றும் உதடு பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் பிரேதபரிசோதனை தகவலில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிபடுத்துகின்றனர்.
அதன்படி குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் நேற்று இரவும் சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் அந்த வீட்டு பகுதியில் சுற்றி வந்தது.
மேலும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் இருந்த செல்போன் அழைப்பு விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.